Friday, February 6, 2009

மகேந்திரசிங் தோனியும், எங்க ஆத்து மாமியும்!





இந்திய அணித் தலைவர் மகேந்திரசிங் தோனி எனக்கு பிடித்த கிரிக்கட் வீரர் என்பதை விட எனக்குப் பிடித்த மனிதர் என்றே கூறலாம். இவற்றையெல்லாம் கூறுவதால் நான் இந்திய அணியின் ரசிகனென்றோ இல்லை வெறியனென்றோ (இந்திய அணியின் ரசிகர்களுக்கு மட்டுமே இச்சொல் பொருந்தும் ) எண்ணிவிட வேண்டாம். என்னைக் கவர்ந்தது கிரிக்கட்டைத்தாண்டிய அவரது குணங்கள்தான்.

அவரது சிறந்த தலைமைத்துவம்தான் துவண்டுகிடந்த இந்திய அணியைத் தூக்கி நிறுத்தியது என்றால் அது மிகையல்ல. தலைமைத்துவம் எவ்வளவு கடினமானது என்பது பாடசாலையில் ஓராம் வகுப்பில் தொடர்ந்து ஒரு வருடமாக Monitor ஆக இருந்த எனக்குத்தான் தெரியும். யாரை எப்போது எங்கே எப்படிப் பயன்படுத்துவது என முடிவெடுத்து, இக்கட்டான நிலையிலும் அணியை வெற்றியை நோக்கி நடாத்திச் செல்லும் அழகே தனிதான்.

ஆட்டம் விறுவிறுப்பாகப் போகும்போதுகூட நிதானம் தவறாது, புன்னகை குறையாது இருப்பதென்பது ரசிகர்களாற்கூட முடியாத காரியம். அதுவும் அவரது வயதிற்கு அந்த முதிற்சி அதிகம் என்றே கூறலாம்.

அணியின் சீனியர்கள், மற்றும் அவரது எதிரணி வீரர்களை மதிக்கும் பண்பு அபாரம். எதிரணி விக்கட்டுகள் சரியும்போதும் பெரிதாகக் கொண்டாடாத தன்மை இந்திய அணிக்குப் புதிது. அதுவும் அண்மைய இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நடுவரின் தீர்ப்பு தனக்குச் சாதகமாக அமைந்தும் தனது மனச்சாட்சியின்படி வெளியேறியது அவரது நேர்மைக்கு எடுத்துக்காட்டு. ரசிகர்களின் மனதில் என்றுமே அவருக்கு இடமுண்டு.


எங்க ஆத்து மாமியோ இதற்குச் சில விடயங்களில் எதிரான குணம் கொண்டவர். எளிதில் ரென்சன் ஆவதில் வல்லவர். அடுத்தவர்களை நம்பாது தானே எல்லா வேலைகளையும் செய்துவிடுவார். அடுத்தவர் செய்தால் சரியாக வராதென்பார். ஒருநாள் இவரிடம் நகைச்சுவையாக மகேந்திரசிங் தோனியைப் பற்றிக் கூறினேன். அவர் எவ்வாறு உணற்சி வசப்படாதிருக்கிறார் எனக் கூறினேன். அதற்கோ அவர் கூலாக என்னையும் இப்படி T.V யில் காட்டும்போது நானும் அப்படித்தான் கூலாக இருப்பேன் என்றார். ஸ்ஸப்பா…. முதல்ல மாமாட்ட சொல்லி ஆத்தில நாலு வீடியோக் கமரா வாங்கி மாட்டணும்.

0 comments:

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy