Saturday, April 11, 2009

இதை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க ப்ஸீஸ்







புதுவருட விடுமுறைக்காக கொழும்பின் இயந்திர வாழ்க்கையை விட்டு வந்துவிட்டேன். மகிழ்ச்சியாக இருந்தாலும், பிறந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை என்ற கவலையும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பெற்றோரைப்பார்த்தும் ஒரு வருடம் கடந்துவிட்டது. ஏதே சொந்தக்கதை, சோகக்கதை என்று போயிடாதீங்க. இது இந்த விடுமுறையில் எனது சித்தப்பா சொன்ன, தனது வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவம், மற்றயது என்னுடைய சம்பவம். மிகவும் நகைச்சுவையாக இருந்ததால் அப்படியே இங்கே. ஆனா இத யார்கிட்டயும், முக்கியமா சித்தப்பாகிட்ட சொல்லிடாதீங்க ப்ஸீஸ்.



அது அவர் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட காலம். சிறுவர்களுக்கென சிறிய சைக்கிள் இல்லாததால் பெரியவர் சைக்கிளிலேயே ஓட்டக் கற்றுக்கொண்டார். நிப்பாட்டுவதற்கு கால் எட்டாது. அதனால் வீட்டுக் கேற் அருகிலுள்ள ஒரு கல்லும், சிறிது தூரம் அப்பாலுள்ள ஒரு மரத்தின் வேருமே சைக்கிள் நிறுத்தும் இடங்கள். இடை தடுவிலெல்லாம் நிறுத்துவதானால் ஒன்றில் விழ வேண்டும், இல்லையானால் எங்காவது மோதவேண்டும்.



அது சன நடமாட்டம் குறைந்த இடமாகையால் பிரச்சனை இருந்ததில்லை. ஆனால் விதி வலியது இல்லையா? ஒருநாள் பிரச்சினை ஒரு குயவன் வடிவில் வந்தது. சித்தப்பா சைக்கிளில் புறப்படவும் அந்தக் குயவன் அவருக்குக் குறுக்கே வரவும் சரியாக இருந்தது. என்ன நடந்திருக்கும் என்று புரிந்திருக்குமே, அதேதான். அன்று தான் சைக்கிளில் ஏற்றிவந்த அத்தனை பானைகளையும் ஒருவரே வாங்குவார் என்று அந்தக் குயவனே எதிர்பார்த்திருக்கமாட்டான். அத்தனை பானைகளும் அன்று தாத்தாவிற்கு விற்பனையாயின உடைந்த நிலையில்.



இனி என்னுடைய சைக்கிள் அனுபவம்,



எனக்கு அப்பாவின் புண்ணியத்தில் சைக்கிள் ஓட்டப் பழகுவதற்கு சிறிய சைக்கிள் கிடைத்திருந்தது. ஆனால் அதை ஓட்டப் பழகுவதற்குப் பெரும் பாடாக இருந்தது. அப்பாதான் பின்னால் பிடித்துக்கொண்டு வர, எனது சைக்கிள் பவனி இருக்கும். ஒருநாள் அப்பா எனக்குத் தெரியாமல் கையை விட்டுவிட்டார். ஆனால் நான் அப்பா பிடித்திருக்கிறார் என்ற தைரியத்தில் ஓட்டிக்கொண்டு போகின்றேன். அப்போது எதிரில் வந்த அந்த ஆச்சி அன்று யாருடைய முகத்தில் முழித்தாரோ, என்னைப்பார்த்து ‘அட அப்பா பிடிக்காமலேயே ஓட்டப் பழகிவிட்டாயா?’ என்று கேட்க, எனக்கு அப்போதுதான் அப்பா பிடிக்காததைத் தெரிந்தது. அதைச் சொன்ன பாவத்திற்காக அன்று அந்த ஆச்சி எனது சைக்கிளில் மோதி பரிதாபமாக விழுந்து, அடுத்த இரண்டு நாட்கள் மூட்டு வலியால் நடக்கவே இல்லையாம்.



2 comments:

Unknown on April 11, 2009 at 10:39 AM said...

படம் சூப்பர். எல்லோருக்கும் இது நடக்கிறதுதான்.பதிவும் நல்லா இருக்கு.

சாந்தி நேசக்கரம் on April 14, 2009 at 6:34 PM said...

சயிக்கிள் ஓடிய அனுபவம் நன்று. உங்கள் சித்தப்பாவுக்குக் கல் தரிப்பிடமானது. எனக்கு எங்கள் வீட்டு வேலி. அந்து வேலி முகத்தைக் கீறியது முதல் அழியாத ஞாபகங்கள் நிறைய.

சாந்தி

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy